தாமஸ் ஆல்வா எடிசன் செய்த "ஆவிகள்" பற்றிய ஆராய்ச்சி..!!


இந்த பிரபஞ்சத்தில் நம்மைச் சுற்றி எத்தனை, எத்தனையோ அதிசயங்கள் நடந்திருக்கின்றன. இன்னமும் நடந்து கொண்டு இருக்கின்றன. நம்ப முடியாத, எளிதில் ஏற்றுக் கொள்ள

முடியாத, நமது அறிவிற்கு அப்பாற்பட்ட எத்தனையோ விஷயங்களுக்கு அறிவியலாலும் விளக்கம் தர முடியவில்லை என்பதே உண்மை... 

"அறிவியலில் எல்லா வினாக்களுக்கும் விடையில்லை" என்றார். தலைசிறந்த விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்.
அதுபோல இப்போது நாம் பார்க்க போகின்ற விஷயத்திற்கும் அறிவியலால் விளக்கம் தர முடியாது. 

பலவிதமான ஆராய்ச்சிகளுக்கு உட்பட்டும் புரியாத ஒரு மாபெரும் மர்மம் ஆவிகள் உலகம்!. இன்றைக்கும் உலகெங்கும் ஆவிகளைப் பற்றிய ஆராய்ச்சிகள் நூற்றுக் கணக்கில் நடந்து கொண்டிருக்கின்றன.

ஆவிகள் என்பது கற்பனை என்று சில ஆய்வாளர்கள் கூறினாலும், எதையும் பகுத்து ஆராய விரும்பும் விஞ்ஞானிகள் ஆவிகள் விஷயத்தை அலட்சியமாக எண்ணுவதில்லை.

நாம் பாமரத்தனமாகக் குறிப்பிடுகிற பேய், மோகினி பிசாசு, குட்டிச்சாத்தான் என்று அவரவர் தனிப்பட்ட நம்பிக்கைகளுக்கேற்ப கற்பனை செய்வது வேறு!. உண்மையிலேயே ஆவிகள் உண்டா என்று ஆராய்ச்சி செய்வது வேறு!. அப்படிப்பட்ட ஆராய்ச்சியாளர்களின் சில அனுபவங்களை இந்த வீடியோவில் காணலாம். 

1920ம் ஆண்டு தாமஸ் ஆல்வா எடிசனை பேட்டி எடுத்த போது, 
ஒரு நிருபரிடம் அவர் கூறியது. "ஒருவேளை ஆவிகள் இருப்பது உண்மையென்றால், அவைகள் நம்மோடு தொடர்புகொள்ளப் பயன்படும்படியான ஒரு கருவியை உருவாக்கவேண்டும் என்ற விருப்பம் எனக்கு இருக்கிறது. அந்தக் கருவி மிக நுட்பமானதாக இருக்க வேண்டும் என்றும் திட்டமிட்டதாக கூறுகிறார். மேலும், தான் பதிவு செய்யும் ஒலிகளைப் பல மடங்கு பெரிதாக இயக்கும் சக்தி படைத்ததாக இருக்க வேண்டும் என்றும்கூட ஆசைப்பட்டார். ஒரு விஞ்ஞானிக்கு மைக்ரோஸ்கோப் எந்த அளவுக்கு பயனுள்ளதா இருக்கிறதோ, அந்த அளவுக்கு தான் கண்டுபிடிக்கும் கருவி, ஆவியுலக ஆராய்ச்சியாளர்களுக்கு பயனுள்ளதாக இருக்க வேண்டும் என்று திட்டமிட்டார். 

பல விஞ்ஞானிகளுக்கு இது பெரும் அதிர்ச்சியாக இருந்தது. எடிசனை கடுமையாக விமர்சித்தனர். எடிசன் எந்த அளவுக்கு இந்த ஆராய்ச்சியில் வெற்றிபெற்றார் என்பது 1931ல் அவர் இறக்கும்வரை மர்மமாகவே இருந்தது. 

ஆனால், அவர் ஈடுபட்ட முயற்சிகளைத் தொடர்ந்தார் ரஷ்ய நாட்டை சேர்ந்த பிரடெரிக் என்பவர். ரஷ்யாவில் பிறந்த பிரடெரிக் ஒரு ஓவியர், இசைக்கலைஞர் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர். மற்றபடி அறிவியல் கல்வி தகுதியெல்லாம் அவருக்கு கிடையாது. ஸ்டாக்ஹோமில் வசித்துவந்த பிரடெரிக், அருகில் உள்ள கிராமத்துக்கு சென்று அங்கு உள்ள பறவைகளின் பல்வேறு ஒலிகளை தனது டேப் ரெகார்டரில் பதிவு செய்து கொண்டு வரவேண்டும் என்று கிளம்பினார். வேலை முடிந்து வீட்டுக்கு வந்ததும், அந்த ஒலி நாடாவை ஆன் செய்தார். பல்வேறு பறவைகளின் குரல்கள் கேட்டன-கூடவே சில மனித குரல்களும். அவை ஸ்வீடன் மற்றும் நார்வே நாட்டு மொழிகளில்!. பிரடெரிக்குக்குத் தெரிந்த வரையில் அவர் பதிவு செய்த இடங்களில் மனித நடமாட்டம் கிடையாது. பின் எப்படி இந்த குரல்கள் என்று யோசித்த அவர், ஏதாவது வானொலியில் இருந்து வந்துகொண்டிருந்த அலைவரிசை ஒலிநாடாவில் பதிவாகி இருக்கலாம் என்று முதலில் நினைத்தார். ஆனால், ஒலிநாடாவை மேலும் கேட்ட போதுதான், அந்த குரல்கள் இறந்துபோன அவரது சில நண்பர்கள் மற்றும் உறவினர்களின் குரல்களை ஒத்திருந்தன. 

ஆச்சரியமடைந்த அவர், மேலும் பலமுறை இதே போன்ற ஒலிப்பதிவுகளை நடத்தினார். தனது கண்டுபிடிப்புகளை "பிரபஞ்சத்தின் குரல்கள்" என்ற தலைப்பில் நூலாக வெளியிட்டார். இதைப்படித்த ராடிவ் என்ற ஸ்வீடன் நாட்டை சேர்ந்த மனவியல் துறை பேராசிரியர். இதில் பெரிதும் ஈடுபாடு கொண்டார். அந்த ஒலிநாடாக்களை தனக்கு போட்டுக்காட்ட முடியுமா என்று கேட்க, அதற்கு உடனே ஒத்துக் கொண்டார் பிரடெரிக். அது மட்டுமல்லாமல், இதே போன்ற ஒரு ஒலிப்பதிவை அவர் எதிரிலேயே அந்தக் குறிப்பிட்ட இடங்களில் பதிவு செய்து காட்டினார்.

அசந்துபோனார் ராடிவ். இறப்புக்குப் பிறகு உயிர் தனியே உலவுகிறது என்பதை விஞ்ஞானபூர்வமாக நிரூபிப்பதில் அடித்தளம் போட்டாகிவிட்டது என்றே அவர் முடிவெடுத்தார். பிரடெரிக் மற்றும் ராடிவ் இருவரும் இணைந்து இதுபோன்ற ஆராய்ச்சிகளை மேற்கொள்ள தொடங்கினார்கள். அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சிக் கழகமான நாசாவை சேர்ந்த பொறியியல் நிபுணர்கள் இதுகுறித்து ராடிவை சந்தித்து பேசினர். ஆனால், ராடிவின் கண்டுபிடிப்புகளை ஏமாற்றுவேலை என்று கருதினார்கள் பலர். டேப்ரிகார்டர் இயங்கும்போது தானாகவே வெளிப்படும் ஒருவித ஒலியை ஆவிகளுடையது என்று நம்பியதாகவும் சிலர் கூறினர். 1974ல் ராடிவ் இறந்தார். அதற்கு பத்து நாள் கழித்து அவரது கல்லறைக்கு அருகே அவரது டேப்ரிகார்டெரை வைத்தார்கள். தன்னுடைய ஆராய்ச்சியை நிரூபிக்க வேண்டுமென்ற வெறியிலாவது ராடிவின் ஆவி அந்தக் கருவியில் தனது குரலை பதிவுசெய்யும் என்று கருதினர் அவரை நம்பியவர்கள். ஆனால்,அப்படி எதுவும் நடக்கவில்லை.  

ஆனால், ராடிவ் தனது வாழ்நாளில் ஒரு லட்சம் ஒலிப்பதிவுகளை மேற்கொண்டு, அதில் அந்நியக்குரல்கள் இருப்பதை நிரூபித்தார்.

ஆவிகளின் குரல்களை ஆய்வு செய்வது ஒருபக்கம் இருந்தாலும், மனிதர்களின் கண்களுக்கு ஆவிகளின் உருவங்கள் புலப்படும் சம்பவங்களும் நடைபெறுவதாக நாம் கேள்விப்படுகிறோம் அல்லது உங்களுக்கே சிலருக்கு இப்படிபட்ட நிகழ்வுகள் நடந்திருக்கலாம். 

மனோதத்துவ விஞ்ஞானிகளால் ஆரம்பிக்கப்பட்ட Society for Psychical Research என்ற அமைப்பு 1890ல் இருந்து ஆவிகளை பற்றிய தகவல்களையும், விஞ்ஞான ரீதியான சோதனைகளையும் நடத்தி வருகிறது. அவர்களுடைய கோப்புகளில் 20000க்கும் மேற்பட்ட பிரபலமான ஆவிகள் உண்டு. 1960ல் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தை சேர்ந்த விஞ்ஞானிகளால் இன்னும் பல புதிய ஆவிகளின் லிஸ்ட் தயாரிக்கப்பட்டு கோப்புகள் Update செய்யப்பட்டன. 

ஆவிகளை பற்றிய ஆராய்ச்சிகள் நடத்திப் புகழ் பெற்றவர் வீட்லி கேரிங்டன். அவர் சொல்வது, "உடம்புக்குள் கோடிக்கணக்கான செல்கள் இருப்பதுபோல மனதுக்கும் செல்கள் உண்டு. மூளைக்குள் தகவல் பரிமாற்றம் செய்கிற, அத்தியாவசியமான கோடான கோடி செல்களை போல, எண்ணங்களை இயக்குகிற கண்ணுக்குத் தெரியாத Psychons உண்டு" என்கிறார் கேரிங்டன்.    

ஒரு மனிதனின் வாழ்க்கையில், அவனுடைய ஆழ்மனதுக்குள் மிகவும் ஒட்டிக்கொண்டு விடுகிற அனுபவங்கள், இடங்கள், உறவினர்கள் உண்டு. சில நேரங்களில், அரைத்தூக்க நிலையில் திடிரென்று, நாம் படித்த பள்ளிக்கூட வராண்டாவில் நடப்பது போன்ற உணர்வு ஏற்படுவதுண்டு. 

இதற்கு அடுத்தகட்டம் ஒன்று உண்டு. நம்முடைய எண்ணங்களின் Psychons அந்தப் பள்ளிக்கூட வராண்டாவுக்கே சென்று அங்கே நம்முடைய ஆவியாகத் தோன்றுவது. சென்சிடிவ் ஆன சிலரால் அதை பார்க்கவும் முடிகிறது. இறந்த பிறகும், உடலிலிருந்து கடைசியாக வெளிப்பட்டுவிடுகிற Psychons கொஞ்ச காலத்துக்கு பூமியில் தங்குகின்றன. போகப்போக அந்த Psychons வலுவிழந்து மறைந்துவிடுகின்றன. இதுதான் ஆவி. ஆபத்தில்லாத, அப்பாவியான எண்ண அலைகளின் உருவகம். கேரிங்டனின் தியரி இதுவே.. இப்படி தான் ஆவிகளின் உருவங்கள் சில மனிதர்களின் கண்களுக்கு புலப்படுகின்றன என்கிறார் கேரிங்டன். 

 அறிவுக்கு அப்பாற்பட்ட அறிவியலுடன் அடுத்த பதிவில் தொடர்வோம்...!!

கருத்துரையிடுக

0 கருத்துகள்